Saturday, June 26, 2010

தமிழுக்கும் அமுதென்று பேர்...

இது என் முதல் தமிழ் வலை பதிவு. தாக்கத்திற்கு காரணம் தமிழ் செம்மொழி மாநாடாக இருக்கலாம்.



" தீதும்  நன்றும் பிறர் தர வாரா " - ஐ.நா சபையில் இந்திய நாட்டின் சார்பாக பொறிக்கப்பட்ட புறநானூற்று பொன்மொழிகள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் நமக்கு கூறிய வாழ்க்கையின் உயர் தத்துவம்.



கிராமங்களில் திருவிழாக்களின் போது கிடா வெட்டு நிகழ்ச்சி மிகவும் பிரசித்தம். பல வீடுகளில் இருந்து பல தரப்பட்ட ஆட்டுக்கிடாக்கள் கொண்டு வரப்பட்டு வெட்டப்படும். இதை கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பது நம் வாடிக்கை. இப்படி பழகிப்போனதால் என்னவோ இலங்கையில் ராஜபக்க்ஷே கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்ட ஈழ தமிழர்கள் மொத்தமாக பலி கொடுக்கப்பட்டபோது  நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

'தம்பி இறந்த வீட்டில் தலைக்கறி சாப்பாடு' என்பது போல் நம் கண் முன்பே நம் சகோதர தமிழ் இனம் அழிவதை பார்த்து விட்டு தமிழ் அன்னைக்கு விருந்து படைப்பது முறையோ ?

இருப்பினும் இத்தனை சிரத்தையுடன் செயல்படுத்தும் தமிழக அரசுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். நான் எந்த அரசியல் கட்சியையும் போற்றவில்லை. அனால் தமிழக முதல்வரை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இம்மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற அவரே ஆதாரம்.

இன்று  "தமிழுக்கு அமுதென்று பேர்" கவியரங்கதினை பொதிகை தொலைக்காட்சியில் நேரலையில் கண்டேன். திருவரங்கத்து கவித்தளபதி வாலி (ப) கவிஞர் தலைமையில் நடைபெற்றது. திரைக் கவிஞர்கள் பா.விஜய், பழனிபாரதி, புதுக்கவிதை முன்னோடி மு.மேத்தா, கவிஞர்.உமா மகேஸ்வரி மற்றும் பலர் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவரும் ஏறக்குறைய தமிழை மட்டும் படவில்லை கலைஞரை மட்டுமே பாடினர்.

இதை பார்த்தபோது தமிழ் செம்மொழி மாநாடாக தெரியவில்லை   முதல்வர் பாராட்டு நிகழ்ச்சியாகவே இருந்தது. தமிழும் கலைஞரும் வேறில்லை என்பது போன்ற வரிகள் சற்று அதிகமாகவே பாடப்பட்டது.

இருப்பினும் தமிழை பெருமை படுத்தும் சில வரிகள் நெஞ்சில் நிற்கின்றன. சில நாட்கள் கழித்து இதை நான் மறக்க கூடும். எனவே இங்கு அவற்றில் சிலவற்றை பதிவு செய்கிறேன்...

"புறநானூறு தந்த ரகசிய முத்தம் 
 அகநானூறு தந்த வீர யுத்தம் 
 திருக்குறள் தந்த வாழ்வின் சித்தம் - தமிழ்"

" தமிழ் அன்னையின் இளமைக்கு சான்று வேண்டுமா ?
 அவள் மக்களாகிய நாம் இன்றும் பருகுவது பால் தானே 

- ஆம் முப்பால்!!
  இன்று வரை அவளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை வயது மூப்பால்!!"


"நிலா - இரவின் கவிதைகளையெல்லாம் மொத்தமாக பதிந்து வைத்த குறுந்தகடு"

"பனை ஓலை - ஆதித் தமிழனின் SIM card. எழுதுகோள் - தமிழனின் ஆறாம் விரல்"

"தமிழனின் வீரத்திற்கு சான்று - எழுதுகோளை ஆயுதமாகவும் பயன்படுத்த தெரிந்தவன் தமிழன்"
 
கலைஞரை  பாராட்டிய பா.விஜய் இப்படி பாடினார்
"தமிழகத்தில் தான் செல்போன் வைத்திருப்பது போல் கட்சி வைத்திருக்கின்றனர். ஆனால் அத்தனை செல்போனுக்கும் ரிங்டனே கலைஞர் தான்."